இலக்கியச் சுவை – நற்றிணை இன்பம் – (57) குறிஞ்சி


பாடியவர் : பொதும்பில் கிழார்

தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்
குன்ற வேங்கைக் கன்னொடு வதிந்தெனத்
துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி
கல்ல்ர்ன் சுற்றம் கைகவியாக் குறுகி
வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பாற் 5

கல்லா வன்பறழ் கைந்நிலை பிழியும்
மாமலை நாட மருட்கை உடைத்தே
செங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்
கொய்பதம் குறுகும் காலையெம்
மையீர் ஓதி மாண்நலம் தொலைவே. 10

( செறிப்பு அறிவுறீ வரைவு கடாயது )

வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு ஒன்று சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம் நிறைந்ததுள்ள ஒரு வேங்கை மரத்தடியில் தன் கன்றோடு தங்கி தூங்கிக் கொண்டிருந்தது.பஞ்சு போன்ற தலையை உடைய மந்தியானது கல்லென ஒலிக்கும் தன் தன் சுற்றத்தை ஒலிக்காதவாறு கையமர்த்தி விட்டு, அந்த பசுவினிடத்தை அடைந்து, பால் நிரம்பி பருத்திருந்த அப்பசுவினது மடியினை அழுந்தும்படி பற்றி இழுத்து இனிய பாலைக் கறந்து தன் தொழிலைக் கல்லாத குட்டியின் கை நிறைய பிழிந்து நிற்கும். இப்படிப்பட்ட பெரிய மலைகளை உடைய நாட்டிற்குத் தலைவனே! சிவந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறிய திணைப் பயிரையும் உடைய அகன்ற புனமானது கதிர்களைக் கொய்யும் பருவத்தை நெருங்கும் காலத்து எம்முடைய (தலைவியின்)மாட்சிமைப்பட்ட நலனாது கெட்டழிவது உறுதி. ஏனெனில் தலைவி இல்லில் அடைக்கப் படுவாள். அவள் நலம் கெட்டுவிடும். அதனை நினைக்கும் போது என் நெஞ்சம் கலக்கம் உடையதாய் ஆகிறது. ஆகவே தலைவனே நீ விரைந்து வந்து மணந்து கொள்வாயக.

இலக்கிய நயம் : மந்தி கொடிய விலங்கிற்கு அஞ்சாது பதம் பெற்றுச் சென்று பாலைப் பிழிந்து ஊட்டிக் குட்டியைக் காப்பது போல, நீயும் பொருளீட்டி வந்து கொடுத்து இவளை மணந்து பாதுகாப்பாயாக.

Advertisements

மகாகவி பாரதியார் பாடல்- மகாசக்திக்கு விண்ணப்பம்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே யெண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல
நண்ணிய நின்மு னிங்கு
நசித்திடல் வேண்டு மன்னாய்.

மகாகவி பாரதியின் பாடல்கள்

ஓம் சக்தி

வேண்டுவன

மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்